நடக்கப் பழகிய பறவை

தாய் மடியையும் தாய் மண்ணையும் விட்டு விட்டு வெளியூரில்/வெளிநாட்டில் தூக்கத்தைத் தேடும் ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் இந்த உணர்வுப் பதிவு சமர்ப்பணம்...
-----------------------------------------------------------------------------------
எந்திரிடா நேரமாச்சு 
எனும் அப்பாவின் கடிதலில் இருந்த பாசம்
இன்று என் போன் அலாரத்தில் 
இல்லை

கொஞ்சம் சாப்டுட்டு போடா எனும்
அம்மாவை உதாசினப்படுத்தியது போல்
இன்று என் காசில் வாங்கிய உணவை 
உதாசினப்படுத்த மனம் வரவில்லை
இங்கயே எதாச்சும் வேலை பாரு பா என்று
நீங்கள் அன்று என் கை பிடித்து அழுத நியாபகம் 
அந்த ஒருநாளைத் தவிர தினம் தினம் வலிக்குதம்மா
என்ன டிரஸ் எடுத்துருக்க நல்லாவே இல்ல 
என்று நான் அன்று தூக்கி எறிந்த 
பெற்றோரின் பிறந்த நாள் பரிசு
இன்று எங்க அம்மா அப்பா 
நான் காலேஜ் படிகுறப்போ எனக்காக வங்கி தந்த டிரஸ் என்று
பிறரிடம் காட்டும் போது கண்ணீர் கன்னத்தில் அறைகிறது
அன்று நீங்கள் ஒரு அடி அடித்து விட்டிர்கள் 
என்பதற்காக சாப்பிடாமல் நான் தூங்கினேன்
பிள்ள பசி தாங்க மாட்டாங்க என்று 
நீங்கள் இரவெல்லாம் தூங்கவில்லை
இன்று என்னை அசிங்கமாக திட்டிய 
அலுவலக மேலாளர் வீட்டில் விருந்து 
யோசிக்காமல் எனக்கு முன் 
எனது ரோசக்கார நாக்கு சென்று விட்டது
எனக்கு ஒரு நேரம் வரும் 
அப்போ உன்ன பாத்துகிறேன் 
என்று பொய் சண்டை போட்டு வந்த உடன் பிறப்புகளை
உடன் அழைத்து வந்து உண்மையான பாசம் காட்ட 
எனக்கு வாய்ப்புகள் இல்லை
கிழவி நீ எப்போதான் சாவ 
என்று என்னால் சபிக்கப்பட்ட பாட்டியிடம்
நான் அடுத்து வரும் போது கண்டிப்பா நீ இருக்கனும் 
உனக்கு புது கண்ணாடி வாங்கிட்டு வரேன்னு 
போனில் பொய் சொல்லி கண்கலங்காத நேரங்கள் இல்லை
சீ இதெலாம் ஊரானு கேட்டேன் அன்று
இன்று எங்க ஊரு இப்படித்தான் இருக்கும் 
என்று புகைப்படங்களுடன் மார் தட்டுகிறேன்
என்னடா இருமுற 
உடம்பு சரி இல்லையா எனும் உங்களிடம்
ரோட்ல புகை அதிகம் 
அதான் என்கிறேன் அறைக்குள் இருந்து கொண்டு
தினமும் உன்னுடன் ரொம்ப நேரம் பேச வேண்டும் 
என்று ஆசைதான் அம்மா
அழுது விடுவேனோ என்ற பயத்தில்தான் 
எனது சிக்னல் உனக்கு இடையூராகிப் போகிறது
நீங்கள் இவ்வளவு மென்மையனவரா?
ஒரே கேள்வியை இரு கைபேசிகள் 
ஒரே நேரத்தில் இருவேறு நபர்களிடம் 
அவர்களின் கண்ணீர் பட்டதும் கேட்டது
என்னிடமும் என் அப்பாவிடமும் அழைப்பை துண்டித்த பிறகு
யாரும் என்கூட பேச வேணாம் 
என்ன தனியா விடுங்க 
என்று கத்தி விட்டு 
அறைகளுக்குள் புகுந்ததாலோ என்னவோ
இன்று அறைகளின் சுவர்களிடமே அதிகம் பேசுகிறேன்
பசி அழுகை தனிமை எப்படி இருக்கும் 
என்று கூட நீங்கள் எனக்கு காட்டியதில்லை
இன்று வயிறு வலிக்கிறதா இல்லை 
பசிக்கிறதா என்பதை புரிந்து கொள்ளவே 
எனக்கு சில மாதங்கள் தேவைப் பட்டது
பணம் பேர் புகழ் அனைத்தையும் 
அடைந்த மகிழ்ச்சியுடன் 
நான் வாழ்க்கையை கர்வமாக திரும்பி பார்க்கும் போது
நான் தவற விட்ட என் குடும்பத்தின் 
தருணங்களை கையில் ஏந்திக் கொண்டு 
வாழ்க்கை என்னை ஏளனமாகப் பார்த்துச் சிரிக்கிறது
நடந்து பழகுவதற்கு சிறகுகளை விற்ற பறவையாக நான்.
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை