நிர்பய வேள்வி

நிர்பயாக்களுக்கு சமர்ப்பணம்
------------------------------------------------------------------------------
தேசிய கீதத்திற்குத் தலை நிமிரும் ஆண்களே
நிர்பய வேள்வி முன் தலை கவிழுங்கள்
அழகோவியத்தில் அரியாசனித்த அவதாரப் புருஷர்களே
அடிமையாகிப் போனீரோ ஆடை அவிழ்ப்பிற்கு?
கனவுகளில் காட்சி தரும் கடவுள் மார்களே
கண்ணயர்ந்து போனீரோ கதறல் தாலாட்டிற்கு?
கண் கட்டி வாயடக்கி கருப்பு அங்கிக்குள் சட்டம் தேடும் நீதிமான்களே
நின்று பதில் சொல்லுங்கள் நிர்பய வேள்வி முன்...
பெண்னென்றீர் என்னைப் பொன்னென்றீர்
நான் கண்னென்றீர் எனைப் பேணென்றீர்
ஊனென்று என்னை உரைத்ததெவரோ?
ஒரு நிமிட பசிக்கு விலை எனதுயிரோ?
அன்னை என்றீர் எனைத் தங்கை என்றீர்
அன்புத் தோழி என்றீர் சிலர் காளி என்றீர்
சக மனிதி நானென்பதை மறந்ததெவரோ?
சடலத்தில் சபலம் தேடுமிவர் மிருக சமூகத்தின் மகரோ?
கண் பார்த்தால் கர்வம் என்றீர்
கைப்பட்டால் காதல் என்றீர்
மெய்மறந்து சிரிக்கையிலே மேனி கண்டீர்
பொய் வேஷம் கண்டு சினந்த போது வேசி என்றீர்
வாழ்க்கை வலி என்பீர் சிலர் வழுக்கை கூட வலி என்பீர்
கண்ணைத் தூசி தொட்டால் ஊசி தொட்டது போல் துடித்திடுவீர்
கருப்பையை கம்பி கொண்டு குடைந்த கயவரினமே
கை நீட்டுங்கள் பிச்சை இடுகிறேன் பிரசவ வலியை
கற்களிலும் காகிதங்களிலும் கடவுள் என்றோரே
கண்ணெதிரே கேள்விகள் கேட்டதும் கற்பு விலங்கு தந்தீரோ?
உடல் மாற்றத்தின் உடந்தையோடு
உயர்ந்த இனம் என்போரே
மனதிலிருந்து ஒரு கேள்வி
மார்பில் இருக்கும் உங்கள் பார்வையை
உள்ளத்தில் செலுத்தி உண்மையைக் கூறுங்கள்
பிரசவத்திற்கும் பிரேத பரிசோதனைக்கும்
வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு?
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை