உறக்கம் கலைவாயடா


என் செல்வமே என் செல்லமே
உறக்கம் கலைவாயடா

அப்பன் வழி அஹிம்சை என உன்
அன்னையை சீண்டி பார்க்கிறார்கள்
உறக்கம் கலைவாயடா
சுதந்திரமும் சுவாசமும்
சுழற்சி முறையில் மாசு படுகின்றன
உறக்கம் கலைவாயடா
என் அணிகளைத் திருடிய கூட்டம்
இப்போது ஆடையைக் குறி வைக்கின்றன
உறக்கம் கலைவாயடா
உன் தாயின் சாயல்கள் ஊரெங்கும்
உருக்குலைக்கப் படுகின்றார்கள்
 உறக்கம் கலைவாயடா
ஊமைகளின் கரங்கள் மட்டுமே
உதவிக்கு வருகின்றன
உறக்கம் கலைவாயடா
பொக்ரானில் புல் முளைத்ததென
பொக்கை வாயர்கள் சிரிக்கிறார்கள்
உறக்கம் கலைவாயடா
அடுப்பெரிக்கும் மின்சாரத்திற்கு
அணுக்கள் பிளக்கப் படுகின்றன
உறக்கம் கலைவாயடா
அரியாசனங்கள் உன் வாசங்களை
மறக்க முற்படுகின்றன
உறக்கம் கலைவாயடா
வெள்ளை நாய் மேய்க்கும்
வேற்றுலக ஜீவராசிகள் என்
தலை விதி எழுதுகின்றன
உறக்கம் கலைவாயடா
உன்னைக் களவாட நினைத்த கரங்கள்
என்னை விலங்கு போட்டு விசாரிக்கின்றன
உறக்கம் கலைவாயடா
வேளாண்மை தீண்டாமையாக
மாற்றப்படுகிறது
உறக்கம் கலைவாயடா
மூலைக்கு மூலை உன்னைப் போன்ற
மூளைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
உறக்கம் கலைவாயடா
பள்ளிகளும் பல்லிகளைப்போல்
மூடநம்பிக்கை ஓசை எழுப்புகின்றன
உறக்கம் கலைவாயடா
உன் பிள்ளைகளின் கனவுகள்
கருக்கலைப்பு செய்யப்படுகின்றன
உறக்கம் கலைவாயடா
நீ விரித்து வைத்த அக்னிச்சிறகுகள்
கண்ணீர்க் குளங்களில்
கரையத் தொடங்கி விட்டன
உறக்கம் கலைவாயடா
மடிமேல் உறங்கினால்
உன்னை எழுப்பிவிடுவேன் என்று
மடியுனுள் உன்னை உறங்க
வைத்து விட்டார்கள்
உன்னை மீண்டும் பெற்றெடுக்க
நான் இருக்கிறேன்
ஆனால் என்னைத்
தத்தெடுக்கக் கூட யாரும் இல்லை
உறக்கம் கலைவாயடா
என் செல்வமே என் செல்லமே
உறக்கம் கலைவாயடா
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை