பசலை

தமிழை விட காதலை அழகு படுத்த எந்த மொழியால் முடியும். காதலையும் வீரத்தையும் அல்லவா எங்கள் முன்னோர்கள் இரு கண்களாக கருதினார்கள். அப்படிப்பட்ட தமிழ் வழித் தோன்றிய இலக்கியங்களுள் காதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இலக்கியங்கள் ஏராளம். காதல் ஒரு விசித்திர மிருகம் அது அணைத்தாலும் இனிக்கும் அடித்தாலும் இனிக்கும். அப்படிப் பட்ட காதல் துயர் தமிழ் இலக்கியங்களில் அதிகம் பெண்களையே தாக்குகிறது. அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் காதலின் இருமுக இன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். "பசலை" ஒரு அழகிய துயரத்தை குறிக்கும் சொல். காதலனை பிரிந்த காதலி அவன் பிரிவை எண்ணி எண்ணி ஏங்கி அவள் அழகிழந்து, பொலிவிழந்து அவன் வருகையை மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பாள். அப்படி அவள் வாடும் நிலையை "பசலை நோய்" என்று குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். நோய் என்றால் மருந்து வேண்டும் அல்லவா இதற்கும் மருந்து உண்டு காடுகளில் உள்ள மூலிகைகளில் அல்ல. காதலனது மூச்சில் அவன் பேச்சில் அவன் அரவணைப்பில்.
இந்தக் கவிதையில் வரும் காதலியின் காதலன் அவளைப் பிரிந்து சென்று இருக்கின்றான். அவளை பசலை நோய் தாக்கி விட்டது. அவள் அவனை நினைத்து உருகி கவிதை வரைகிறாள். பின்னே பிரிவில் தானே கவிதை எழுத நேரம் இருக்கும். சரிதானே??
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏங்கி இளைத்தேனே உயிர் நீங்கி தவித்தேனே
நீ வந்து அணைக்க வளர்த்த வனப்பு இழந்தேனே
விளக்கு ஊதி அணைத்தேனே விண்மீன் ஒளியில் எரிந்தேனே
என் வேந்தனே உன்னை எண்ணி விம்மி அழுதேனே
கண்கள் சிவந்தேனே கன்னம் கருத்தேனே
உன் இன்ப ஈரம் அற்று என் இதழ்கள் வறண்டேனே
இடை மெலிந்தேனே ஈர்க்கும் நடை மறந்தேனே
இன்னுயிர் நீ இன்றி இலக்கணப் பிழை ஆனேனே
வாசல் ஓடினேன் உன் வாசம் தேடினேன்
ஏமாற்றம் பல முகர்ந்து பூக்கள் வெறுத்தேனே
பொங்கி சிவந்தேனே வெம்பி துடித்தேனே
சுடும் நிலவை உடைக்க என் இதயம் எறிந்தேனே
உருகி தேயுதே என்னுயிர் விலகி விழுந்ததே
உன்னைத் தேடித் தேடியே என் சுயம் தொலைந்ததே
மீட்க வருவாயடா என்னை ஏற்க வருவாயடா
வார்த்தை தொலைத்த இந்த பசலைக்காரியின்
இதழ்களில் தத்தளிக்கும் உன் பெயரைக் காக்க
உன் இதழ் வலை எடுத்து எறிவாயடா.
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்