தங்கை என்னும் உயிர்ச்சொல்



தேவதைகள் வானில் தோன்றி
பூமியில் விழுந்து மறையும் என்பார்கள்
பாவம் அவர்கள் யாருக்கும்
ஒரு தங்கை இல்லை என்று நினைக்கிறேன்

ஒரு சின்ன ஏக்கம் எப்போதும் உண்டு
நாம் இருவரின் குழந்தைப் பருவங்களும் வேறு வேறு
ஆனால் உன்னருகில் நான் இருக்கும் போதெல்லாம்
என்னை குழந்தையாக மாற்றி விடுகிறாயே?

பொதுவாக ஆண்கள் மனைவி வந்த பிறகுதான்
கண்ணன் அவதாரம் துறந்து ராமன் அவதாரம் எடுப்பார்கள்
ஆனால் என்று உன்னை உணர்ந்தேனோ அன்றே ராமன் ஆனேன்
ஆம்! அனைத்து பெண்களும் யாரோ ஒருவருடைய தங்கை தானே

முத்தம், அரவணைப்பு, மடியில் துயில்தல், மார்பில் சாய்தல்,
தோளில் துவளல், கரம் கோர்த்தல், முடி கோவுதல், பாதம் வருடல்
இவையெல்லாம் அன்னை, மனைவி சார்ந்த இரு பரிமாணங்களே !
ஆனால் முதல் முதலில் முப்பரிமாணம் நீ, ஒரு ஆச்சரியம்தான்

ஆண் என்ற கர்வம் எப்போதும் எனக்குள் உண்டு உன் விசயத்திலும் அது விதி விலக்கில்லை ஆனால், உன்னிடம் நான் கொள்ளும் கர்வம்
நீ அடிக்கும் போது வலி மறந்து நடிக்கும் போது மட்டுமே
சீக்கிரம் உன் நகங்களின் நீளத்தை குறைக்க வேண்டும்

மூடர்களின் வாக்கு, சகோதரி என்பவள் 
உன் தந்தையின் ரத்தம் என்பது
ரத்தமும் சதையும் மனித பிறவிகளுக்கு மட்டுமே
தேவதைகளுக்கு இல்லை ஆம், பனி குடங்கள் வேறாக இருக்கலாம்
பாசத்திற்கு தேவை இல்லை பிறப்பு, ஜாதி சான்றிதழ்கள்

தங்கை என்பது பெயர்ச்சொல் தமிழை பொறுத்த வரை
பாவம் தமிழும் பெண் தானே
ஒருவேளை தமிழ் ஆணாக இருந்து அண்ணன் என்னும் பொறுப்பை ஏற்றிருந்தால் தங்கை என்பது உயிர்ச் சொல்லாக மாறி இருக்கும்.



-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆயிரம் முத்தங்கள்

பசலை