அன்னை என்னும் சிலுவை

நிலமடியில் விதையென சுமந்து
அடிவயிற்றில் அடைகாத்து
துளிரென கிழிக்கும் போதும் 
தூய முத்தம் தூவி எடுத்து
மலை மேக மார் சுரந்து
இதழோரம் ஈரம் சேர்த்து
தென்றலாய் உடல் வருடி
காற்றியல்பாய் கதை சொல்லி
நிலவோடு சண்டையிட்டு
நின் சேலையெனும் சோலை சூழ்ந்து
செடியாகும் வேளையிலே
கொடியாக நிழல் தந்து
வேராக நீ மறைய
சீராக நான் வளர்ந்தேன்
மொழி தந்து ஊமையானாய்
வலி பெற்று உவகை கொண்டாய்
உலகம் உணர்த்தி ஒதுங்கிப் போனாய்
உதறிப் போனேன் உயிர் நொந்தாய்
ஊட்டிவிடும் போது தெரியவில்லை
நீ பசியாறவில்லையென்று
மடி விழும் போது தெரியவில்லை
நீ மனமுடைந்தாய் என்று
தேற்றிவிடும் போது தெரியவில்லை
நீ அழுதாய் என்று
ஏற்றி விடும் போதும் தெரியவில்லை
நீ மிதிக்கப்பட்டாய் என்று
வலி தாங்கி வலி தாங்கி
சிலையாகிப் போனவளே
உனது உளி நானென்ற
உண்மையை மறைத்ததேனோ?
புண்ணியங்களில் புதைந்து
பூ மாலையானவளே
உன் புண்களை யாரறிவார்?
கண்ணீர், காய்ச்சல், காலிடை உதிரம்
எனது காலை உணவுகளுக்குப் பின்னால்
எத்தனைப் போர்க்களங்கள்?
வறண்டு போகட்டும் உன் தியாக புதைகுழிகள்​
வருகின்ற காலத்திலாவது
வேர்களில் வெளிச்சம் விழட்டும்
கருப்பை வரதட்சணை பெற்று
கல்யாணங்கள் முடியட்டும்
அன்னை என்னும் சிலுவையில்
"அவள்" என்ற இனம் மட்டுமே
அறையப்படுவது வேண்டாம்
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை