நாய் குட்டியும் நான்கு மிட்டாய்களும்
ஐந்து வயதென்று அறியும் முன்னே
அந்த மிட்டாயை ஒளித்து வைத்தாளாம்
பொம்மை நாய் குட்டிக்கு பசி என்பாளாம்
அந்த மிட்டாயை ஒளித்து வைத்தாளாம்
பொம்மை நாய் குட்டிக்கு பசி என்பாளாம்
ஈரைந்து வயதடைந்த போது,
தாய்மை வேடம் தரித்திடுவாளாம்
தம்பி பாப்பா தன் பாப்பா என்றிடுவாளாம்
தாய்மை வேடம் தரித்திடுவாளாம்
தம்பி பாப்பா தன் பாப்பா என்றிடுவாளாம்
ஈறாரை எட்டியதும்,
தனிக் குளியலறை கண்டிடுவாளாம்
தன் வெட்கம் கண்டு அஞ்சிடுவாளாம்
தனிக் குளியலறை கண்டிடுவாளாம்
தன் வெட்கம் கண்டு அஞ்சிடுவாளாம்
பதினைந்தில் பதிந்த போது,
காலிடை உதிரம் கண்டு உறைந்திடுவாளாம்
கன்னி எனும் மீளா நிலை அடைந்திடுவாளாம்
காலிடை உதிரம் கண்டு உறைந்திடுவாளாம்
கன்னி எனும் மீளா நிலை அடைந்திடுவாளாம்
பதினெட்டெனும் மாற்றுத்திறனிடத்தே இவள் பட்டாம்பூச்சியாம், சிறகுகள் சிதைப்பதற்கென்றே முளைத்த மார்பேனும் சிறையே சாட்சியாம்
இருபதெனும் இன்னல், இவள் இருதலைக் கொல்லியாம் அதன் அறிகுறி காதெலெனும்
உயிர்க் கொல்லியாம்
உயிர்க் கொல்லியாம்
குடும்பம் என்னும் குட்டை நாடு, இவள்
அடக்கல் தேசமாம் அங்கு கூச்சம் எனும் பொய்
இவள் அணிந்த தேகமாம்
அடக்கல் தேசமாம் அங்கு கூச்சம் எனும் பொய்
இவள் அணிந்த தேகமாம்
இரு பதினொன்று கணக்கிற்கு எளிதாம்
கன்னிக்கு கடிதாம் கனவெனும் கானகம் அளித்து கல்யாணம் எனும் மழை வேண்டும் காலமதாம்
கன்னிக்கு கடிதாம் கனவெனும் கானகம் அளித்து கல்யாணம் எனும் மழை வேண்டும் காலமதாம்
இரு பன்னிரண்டு இரட்டை, எனும் இரைச்சலோசையாம் இவள் வாழ்க்கை எனும் அமைதியை கெடுத்த குறட்டை பாஷையாம்
இருபத்தியாறு எனும் வறண்ட நிலமாம்
வற்றாத நதி இவளை குடித்தது
பிள்ளை என்னும் கனமாம்
வற்றாத நதி இவளை குடித்தது
பிள்ளை என்னும் கனமாம்
முப்பது என்னும் மூன்றாம் பிறையாம்
முளைத்து உன்னை சூழ்ந்தது
சமூக நரையாம்
முளைத்து உன்னை சூழ்ந்தது
சமூக நரையாம்
நாற்பது எனும் நடுநிலையை நாடு பாராட்டுமாம்
தன் மாதவிடாய் தொலைத்தவளை
நன் மங்கை என சீராட்டுமாம்
தன் மாதவிடாய் தொலைத்தவளை
நன் மங்கை என சீராட்டுமாம்
நாற்பத்தைந்து எனும் நாசகாலம் நாய்களின் குணமாம், எம் பெண்ணவளுக்கு மட்டும்
நாய்களை மேய்க்கும் குணமாம்
நாய்களை மேய்க்கும் குணமாம்
ஐம்பது என்னும் அடுத்த கட்டம் அரை வரலாறாம்
அறைகளுக்குள் அடைந்த இவளின்
திரை வரலாறாம்
அறைகளுக்குள் அடைந்த இவளின்
திரை வரலாறாம்
ஐம்பத்தைந்து எனும் ஐகார வியாதி
கண்ணாடி தந்ததாம், கனவுக் குருடியின் கடைசிப்
பார்வையும் குறைந்ததாம்
கண்ணாடி தந்ததாம், கனவுக் குருடியின் கடைசிப்
பார்வையும் குறைந்ததாம்
அறுபதெனும் அந்த யுகம் அரும்பெரும் பாரமாம்
அவளின் அன்பிற்கான தேடலின் அடுத்த கட்ட
பரிமாணமாம்
அவளின் அன்பிற்கான தேடலின் அடுத்த கட்ட
பரிமாணமாம்
எழுபதென்பது ஏதோ ஒரு முடிவு தேசமாம்
பயணச்சீட்டாய் அவள் அசலை
கிழித்த அது ஒரு வழிப்பயணமாம்.
பயணச்சீட்டாய் அவள் அசலை
கிழித்த அது ஒரு வழிப்பயணமாம்.
எழுபத்தியொன்றில் அன்று அவளின்
நினைவு நாளாம், புகைப்படத்திலும்
பொய்யாக சிரித்த கனவுக்காரிக்கு படையலாய்
நாய்க்குட்டி பொம்மையும் நான்கு மிட்டாய்களும்
நினைவு நாளாம், புகைப்படத்திலும்
பொய்யாக சிரித்த கனவுக்காரிக்கு படையலாய்
நாய்க்குட்டி பொம்மையும் நான்கு மிட்டாய்களும்
அடியே பெண்னே!!!!!!!!! தியாகங்கள் ஜாக்கிரதை.
-அருள்
கருத்துகள்